இலங்கையில் நீதியை அணுகுவதென்பது அதிக செலவீனத்திற்குரிய விடயமாக மாறி வருகின்றது.இதனால் பொருளாதார ரீதியில் வறிய நிலையிலுள்ள சமூகத்தினர் அவர்கள் சந்திக்கும் அநீதிகளை பார்வையற்ற நிலையில் நோக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக அவர்கள் தமது அடிப்படை சுதந்திரத்தை அனுபவிப்பதிலும் தடைகளை சந்தித்து வருகின்றனர். இவ்விடயமானது நாட்டின் அபிவிருத்தி இலக்குகளிலும் தடைகளை ஏற்படுத்தகூடிய விடயமாகும்.

இலங்கையில் எவரேனும் நபர் ஒருவர் ஏதேனும் குற்றம் சாட்டப்பட்டால் தகுதி வாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் நடாத்தப்படும் நியாயமான விசாரணை ஒன்றில் நேரடியாக உரைப்பதற்கு அல்லது சட்டத்தரணி மூலம் உரைப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும் என அரசியலமைப்பின் உறுப்புரை 13(3) கூறுகின்றது. ஆயினும் வளப்பற்றாக்குறை காரணமாக நடைமுறையில் இவ்வுரிமையை அனுபவிப்பதில் தடைகள் காணப்படுகின்றன.

இத்தடைகளை சட்டமுறைமையில் காணப்படும் பல்வேறு நபர்களும் குறைக்க முன்வர வேண்டும் என்பதுடன் அதற்கு உறுதுணையாக சட்ட உதவிப் பிரிவு முன்னெடுக்கும் உன்னதமான இம்முயற்சியில் சட்டத்தரணிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் சட்டமாணவர்களின் ஈடுபாடும் இச்செயன்முறையில் இன்றியமையாத ஓர் வளமாகும். சமூகத்தின் நன்மைக்கு பங்காற்றுதல்,மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்குதல் ஆகியன இச்சேவையின்  இரு வகிபாகங்கள் ஆகும். அத்துடன் இலங்கையின் இலவசக் கல்வியால் பெற்ற பயனை சமூகத்திற்கு திருப்பிச் செலுத்தும் ஒரு வழிமுறையாக இது அமைகிறது.

இது சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்காக அரச அமைப்புகள், சட்டத்துறை நிபுணர்கள்,சட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து செயற்படுத்தும் நல்லேதுவுக்கான இலவச செயற்றிட்டமாகும்.

This post is also available in: English, Sinhalese